கிருஷ்ணகிரி: சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடியாததால், இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், மாருப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சத்யா, 23. இவருக்கு திருமணமாகி, ஐந்தாண்டுகள் ஆகிறது. தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், இருவரும் கடந்த, நான்காண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், சத்யாவுக்கு சமூக வலைத்தளம் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த, சானிஷா, 23, என்பவருடன் காதல் உண்டானது. கடந்த மாதம், 19ல் குருவிநாயனப்பள்ளிக்கு வந்த சத்யா, தன்னை திருமணம் செய்துகொள்ள, சானிஷாவை வலியுறுத்தினார். அவர் மறுத்ததால் மனமுடைந்த சத்யா, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலின்படி வந்த அவரது அண்ணன் ராஜா, கிருஷ்ணகிரி வந்து, சத்யாவை, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு, நேற்று முன்தினம் சத்யா உயிரிழந்தார். இது குறித்து ராஜா, கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள, சானிஷாவை தேடி வருகிறார்.