கிருஷ்ணகிரி: ''பொதுமக்கள் அச்சமின்றி கோவாக்சின் ஊசியை போட்டு கொள்ளலாம்,'' என, நலப்பணிகள் இணை இயக்குனர் கூறினார். கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் கோவாக்சின் ஊசி போடப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 60 வயதை கடந்தவர்களுக்கும், உடலில் பல்வேறு நோய்கள் உள்ள, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நேற்று முதல், கோவாக்சின் ஊசி போடப்படுகிறது. முதல் கட்ட ஊசியை போட்டுக் கொண்டவர்கள், 28 நாட்களுக்கு பிறகு, இரண்டாம் கட்ட ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். ஊசி போட்டுக்கொள்ள விரும்புவோர், அரசு மருத்துவமனையில், ஆதார் அல்லது ஏதாவது ஒரு ஆவணங்களுடன் சென்று, கோவாக்சின் ஊசி போட்டுக் கொள்ளலாம். நேற்று, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில், மக்கள் தடுப்பு ஊசி போட்டு கொள்வதை, அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் முத்துசெல்வன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். இது குறித்து, நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன் கூறுகையில், ''கோவாக்சின் ஊசி போட்டு கொள்வதால், எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. மக்கள் அச்சமின்றி ஊசி போட்டுக் கொள்ளலாம். தற்போது, கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதால், ஊசி போட்டு கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்றார்.