சென்னிமலை: ஊத்துக்குளி அருகே, பணத்துடன் கொள்ளை அடிக்கப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரம், பெருந்துறை அருகே, நேற்று மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே கூலிபாளையத்தில், பாங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம்., மையத்தில், நேற்று முன்தினம் அதிகாலை கொள்ளை கும்பல் புகுந்தது. இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஆங்கில சினிமா பாணியில், டாடா சுமோ காரில் கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்து சென்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் பகுதியில், பைபாஸ் சாலையோரம், டாடா சுமோ காரை, நேற்று முன்தினம் போலீசார் மீட்டனர். விசாரணையில், பெருந்துறை, ஈங்கூரை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், அதை திருடிய கும்பல், கொள்ளைக்கு பயன்படுத்தியதையும் கண்டுபிடித்தனர். அதேசமயம் பணத்துடன் கொள்ளை கும்பல் கொண்டு சென்ற இயந்திரத்தை தேடி வந்தனர். இந்நிலையில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் சரளை என்ற இடத்தில், ஏ.டி.எம்., இயந்திரம் நேற்று கிடந்தது. மெஷினை உடைத்து, பணத்தை எடுத்த கும்பல், இயந்திரத்தை வீசி சென்றுள்ளனர். ஏ.டி.எம்., இயந்திரம் கிடந்த இடத்தில் ஊத்துக்குளி, காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.