கரூர்: வெள்ளியணை குளத்தில் இருந்து, இரவு நேரத்தில் மண் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. கரூர் மாவட்டம், வெள்ளியணையில், 400 ஏக்கரில் குளம் உள்ளது. குளத்துக்கு வரும் நீர்வரத்து பகுதிகள் பெருமளவுக்கு ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், குளத்துக்கு தண்ணீர் வருவது அடியோடு நின்று விட்டது. கடந்த, 2017ல் குளத்தில் இருந்த, சீமை கருவேல மரங்கள் தனியார் பங்களிப்புடன் முழுமையாக வெட்டப்பட்டன. பிறகு, குளத்தில் இருந்து மண், விவசாய பணிகளுக்கு எடுத்து கொள்ள, தமிழக அரசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் உத்தர விட்டது. ஆனால், தற்போது தொடர்ந்து அனுமதி இல்லாமல் வெள்ளியணை குளத்தில் இருந்து, மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரத்தில் மண் கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம், வெள்ளியணை குளத்துக்கு தண்ணீர் வந்தது. இதனால், நிலத்தடி நீர் உயரும் வகையில், வெள்ளியணை குளத்தில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.