சின்னசேலம் : சட்டசபை தேர்தலையொட்டி சின்னசேலம் நகரப்பகுதியில் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட சின்னசேலம் பகுதிகளில், தேர்தல் அமைதியாக நடத்தும் பொருட்டு, எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில்,டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எப்) மற்றும் போலீசார் உட்பட100க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் காந்தி நகர், கடைவீதி, சேலம் மெயின்ரோடு, கூகையூர் ரோடு ஆகிய பகுதிகளின் வழியாக அணிவகுப்பு நடத்தப்பட்டது.தேர்தல் காலத்தின் போது வாக்காளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சின்னசேலம் சப் - இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், ஏழுமலை, தனிப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் அன்பு, தனிப்பிரிவு காவலர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.