ஆலந்துார், கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், 14 கோடி ரூபாய் மதிப்பில், பஸ் நிழற்குடை, வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் மற்றும் உணவகம் உள்ளிட்ட நவீன கட்டமைப்புகள் உருவாகி வருகின்றன. இவை, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளன.
திட்டம்
சென்னை, ஆலந்துார் - கிண்டி இடையே, கத்திப்பாரா சந்திப்பில், போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக, 2008ம் ஆண்டு, பிரமாண்ட மேம்பாலம் திறக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில், கத்திப்பாரா மேம்பாலம் அமைந்துஉள்ளது. இப்பாலத்தின் அருகே, உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ளது.
கத்திப்பாரா மேம்பாலத்தின் அருகே, ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில், கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள காலி இடத்தில், மெட்ரோ ரயில் பயணியருக்காக, பல்வேறு வசதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.அத்திட்டத்திற்கு, மெட்ரோ ரயில் சார்பில், 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன.கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால், இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது, இந்த பணிகள் மீண்டும் துரித கதியில் நடந்து வருகின்றன. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, அப்பகுதியை, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர்.
உருவாக்கம்
இது குறித்து, அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில், 5.85 லட்சம் சதுர அடி காலி இடம் உள்ளது. அது நான்காக பிரிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. சிறார் பொழுது போக்கு பூங்கா, நடைபாதை, திறந்த வெளி கலையரங்கம், உணவகங்கள், வணிக வளாகங்கள், கழிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன.மேலும், வங்கி ஏ.டி.எம்., சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், 100 இருசக்கர, 40 நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், புல்தரை, அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன.
தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு, பாரிமுனை, திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு, கத்திப் பாரா சந்திப்பில் இருந்து, நேரடி பஸ்களை இயக்கும் வகையில், பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. ஏப்ரலில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்--