உடுமலை:'எதிர்காலத்தில் எவ்விதமான தொழில் சார்ந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டும்,' என, திறன் மேம்பாட்டு பயிற்சியில், மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லுாரியில், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மாணவியரை தொழில் முனைவோர்களாக மாற்றுவதன் முயற்சியாக, திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த மாதம், 25ல் துவங்கிய இப்பயிற்சி முகாம், இன்று நிறைவடைகிறது. கல்லுாரி செயலர் சுமதி, முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் ஆலோசகர் மஞ்சுளா தலைமையில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.இதில், காதணிகள், வளையல்கள், ஓவியம், அழகு ஒப்பணை மற்றும் தையல் என, தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், 'எதிர்காலத்தில் எந்த விதமான தொழில் சார்ந்த மற்றும் சாராத பிரச்னைகளையும் எதிர்கொள்ள, தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்,' என மாணவியர் அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மைய ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி மற்றும் குழு உறுப்பினர் செய்திருந்தனர்.