ராமேஸ்வரம் : ---பாம்பன் தேசிய நெடுஞ் சாலை பாலத்தில் சிகரெட் தீயினால் மின்கேபிள், குடிநீர் குழாய் தீப்பிடித்து எரிந்தது.
பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஆயிரத்துக்கு மேலான வாகனங்கள் ராமேஸ்வரம் வந்து செல்கிறது. இப்பாலத்தின் இருபுறத்திலும்மின்சாரம், தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும்காவிரி குழாய் மூலம் குடிநீர், மின்சாரம் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிக்கு வருகிறது.நேற்று பாலம் நடுவில் திடீரென மின்கேபிள் தீ பிடித்து எரிந்ததில், அருகில் இருந்த தனியார் தகவல் தொடர்பு கேபிள், பிளாஸ்டிக் குடிநீர் குழாய் எரிந்து வீணானது.ராமேஸ்வரம், பாம்பன்,தங்கச்சிமடத்திற்கு அரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
இதனை மண்டபம் மின்வாரிய உதவி பொறியாளர் நித்யா ஆய்வு செய்து, மாற்று மின்கேபிளில் தீ பிடித்ததால், மின்தடை ஏற்படாது என தெரிவித்தார். மண்டபம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.பாம்பன் போலீசார் நடத்திய விசாரணையில், பாம்பன் பாலத்தில் நின்று துாண்டிலில் மீன்பிடிப்பவர்கள் சிகரெட் தீயை மின்கேபிள் உள்ள நடைபாதை சிமென்ட் சிலாப் கற்களுக்கு இடையில் போட்டதால், தீ பிடித்து கேபிள், குழாய்கள் எரிந்திருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து பாம்பன் போலீசார் விசாரிக்கின்றனர்.