உடுமலை:தமிழகத்தில், சுகாதார செவிலியர்கள் வாயிலாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைக் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், மூத்த குடிமக்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:விருப்பம் உள்ளவர்கள் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து, பதிவு செய்து, தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இருப்பினும், பலர், தடுப்பூசி போட தயக்கம் காட்டுகின்றனர்.எனவே, சுகாதார செவிலியர்கள் வாயிலாக, 60 வயதைக் கடந்த முதியவர்கள் குறித்த விவரம், வீடுகள் தோறும் நேரடியாகச் சென்று கணக்கிடப்படுகிறது. தவிர, உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையிடம் இருந்தும் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.