கானத்துார்:கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், பயிற்சியளித்த பயிற்சியாளருக்கு, அவரிடம் பயிற்சி பெற்ற காவலர்கள் சேர்ந்து, கவுரவிப்பு விழா நடத்தினர்.
1986ம் ஆண்டு, காவல் துறையில் சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு, பாளையங்கோட்டையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு, பகவதிஅப்பன் என்ற காவலர், பயிற்சி அளித்தார்.அவரிடம் பயிற்சி பெற்ற காவலர்கள், அவரை கவுரவிக்க முடிவு செய்தனர். இதற்கான விழா, கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியில் நடந்தது.
நடிகர் தாமு, குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தற்போது பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், பகவதிஅப்பனுக்கு, தங்க மோதிரம் அணிவித்து கவுரவித்தனர்.பின், பள்ளி மாணவ - மாணவியருக்கு படிப்பு உபகரணங்கள் வழங்கினர்.
ஒவ்வொரு காவலர்களும், தங்கள் பணி அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.ஒன்றாக பயிற்சி பெற்ற காவலர்கள், 35 ஆண்டுகளுக்கு பின், ஒன்று கூடிய இந்நிகழ்வு, அவர்களுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.