கண்ணகிநகர்:முதல்முறையாக, சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்ற, கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய மாணவ - மாணவியர், சேமித்த பணத்தில், தங்களுக்கு விருப்பமான புத்தகங்கள் வாங்கினர்.
சென்னை, கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து, 704 வீடுகள் உள்ளன. இங்குள்ள, மாணவ - மாணவியர், அதே பகுதியில் உள்ள, அரசு பள்ளியில் படிக்கின்றனர்.இவர்களுக்கு, அதே பள்ளி வளாகத்தில், அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில், இலவச மாலை நேர டியூஷன் நடத்தப்படுகிறது. இதில், 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இவர்களின், படிப்புக்கு உதவும் வகையில், வாசிப்பு திறனை மேம்படுத்த, புத்தக கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை, டியூஷன் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு அரங்குகளாக சென்ற மாணவ - மாணவியர், புத்தகம் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தில், விருப்பமான புத்தகங்களை வாங்கினர். சிறுகதை, வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்கள் வாங்கினர்.
கண்ணகிநகரில் இருந்து, முதல் முறையாக புத்தக கண்காட்சிக்கு சென்றதால், மாணவ, மாணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.