செம்மரம் பறிமுதல்
திருத்தணி: சித்துார் மாவட்டம், திருப்பதியில் இருந்து, நகரி வழியாக, தமிழக எல்லையான பூனிமாங்காடு வழியாக, சென்னைக்கு வேனில், செம்மரக்கட்டைகள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார், பூனிமாங்காடு ரைஸ் மில் அருகில், வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, டாடா ஏஸ் வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. போலீசார், வேனை மடக்கி சோதனை செய்தபோது, வேனில், பத்து செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.மேலும், வேன் ஓட்டுனர், திருப்பதி, ஓட்டேரியைச் சேர்ந்த வெங்கட் 24, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகள், திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டூ - வீலர்கள் பறிமுதல்
திருத்தணி: திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம் பகுதியில் செல்லும், கொசஸ்தலை ஆற்றில் இருந்து சிலர், இரு சக்கர வாகனங்களில் மணல் அள்ளிச் செல்வதாக, எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.பி.,அரவிந்தன் உத்தரவின் பேரில் பறக்கும் படை போலீசார், மேற்கண்ட ஆற்றில், நேற்று அதிகாலையில் சோதனை நடத்தினர்.அப்போது, இரண்டு இரு சக்கர வாகனங்களில், மணல் மூட்டைகள் கடத்தி வந்ததை கண்டுபிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், தப்பியோடிய வாகன உரிமையாளர்கள் மீது, கனகம்மாசத்திரம் போலீசார், வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
மோசடி செய்தவர் கைது
சோழவரம்: திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவிற்கு உட்பட்ட, வைரம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர், 22. இவர், சகோதரரின் நண்பர், சோழவரம் அடுத்த, சிவந்தி ஆதித்தனார் நகரைச் சேர்ந்த, பெட்ரிக் செபஸ்டின், 26, என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், பணம் வாங்கிய பெட்ரிக் செபஸ்டின், வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல், சேகரை அலைக்கழித்துள்ளார்.இது குறித்து, நேற்று முன்தினம், சேகர், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரிக் செபஸ்டினை கைது செய்தனர்.