ராம ரதயாத்திரை அனுமதி செயல் திட்டம் தேவை ; உயர்நீதிமன்றம் உத்தரவு | மதுரை செய்திகள் | Dinamalar
ராம ரதயாத்திரை அனுமதி செயல் திட்டம் தேவை ; உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2021
03:10

மதுரை : மதுரையில் ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்திர அறக்கட்டளை ரத யாத்திரைக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட வழித்தடங்களில், குறித்த நேரத்தில் பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்து காவல்துறை செயல் திட்டம் வகுத்து, அதன் விபரங்களை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்திர அறக்கட்டளை மதுரை மாவட்ட அமைப்பாளர் செல்வகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த மனு: அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணி நடக்கிறது. அதற்காக ஹிந்துக்களிடம் நிதி உதவி பெறும் பணியில் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. நிதி சேகரிக்க மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்ரகங்கள் கொண்ட ரத யாத்திரை 100 வார்டுகளிலும் நடைபெற அனுமதி கோரி போலீஸ் கமிஷனர், திலகர் திடல் உதவி கமிஷனரிடம் மனு அளித்தோம்.உதவி கமிஷனர், 'கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது.



சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருதி, ரதயாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது,' என நிராகரித்தார். அதை ரத்து செய்து, அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு செல்வகுமார் மனு செய்தார்.பிப்.,19 ல் தனி நீதிபதி, 'அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை போலீஸ் கமிஷனர் பரிசீலித்து நிபந்தனைகளுக்குட்பட்டு வாகனம் சென்றுவர தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: கொரோனா இரண்டாம் அலை பரவுகிறது. சமீபத்தில் மதுரை திருப்பாலை, மேலமடையில் 2 மதங்களைச் சேர்ந்தவர் களிடையே பிரச்னை ஏற்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்தனர். ரதயாத்திரையால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.



இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. எங்கள் தரப்பில் விளக்கமளிக்க தனி நீதிபதி வாய்ப்பளிக்கவில்லை. அவரது உத்தரவிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு, 'தற்போது 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. நிதி சேகரிக்க அனுமதி பெறப்பட்டு உள்ளதா, நிதி எங்கு செலுத்தப்படும், இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விபரங்கள் தரவில்லை.



தற்போது தேர்தல் நடைமுறையால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உள்ளது,' என தெரிவித்தது.நீதிபதிகள்: பிரச்னை ஏற்படாத வகையில் நிபந்தனைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட வழித்தடங்களில், குறித்த நேரத்தில் பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்து காவல்துறை செயல் திட்டம் வகுத்து, அதன் விபரங்களை (மார்ச் 3) இன்று அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X