தர்மபுரி: ''தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணம் எடுத்து செல்லும் வாகனங்கள், பணியாளர்கள் உரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும்,'' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா பேசினார்.
இது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வங்கியாளர்களின் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பறக்கும் படையினர், சோதனைச்சாவடிகள் மற்றும் புகாரின்படி சோதனை செய்யப்படும் இடங்களில், 10 லட்சத்துக்கு மேல், பணம் இருந்தால், வருமானத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஏ.டி.எம்.,களுக்கு பணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிளைமேலாளர்களின் கடிதம், அடையாள அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும். வங்கிகளில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து செல்லும் வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இதர வங்கி வாடிக்கையாளர்களின், பண பரிமாற்ற நடவடிக்கைகளை, அனைத்து வங்கிகளும் தீவிரமாக, கண்காணிக்க வேண்டும். நேர்மையான, வெளிப்படையான முறையில், சட்டசபை தேர்தல் நடக்க, அனைத்து வங்கி பணியாளர்களும், தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், சப்-கலெக்டர் பிரதாப், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.