அரூர்: அரூர் அடுத்த மல்லூத்தை சேர்ந்த மணிபாரதி, 23, என்பவர் அரூர் போலீசில், அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: நான், பொய்யப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவரின், அகில இந்திய பொய்கை காவிப்படை கட்சியில், தனி செயலாளராக உள்ளேன். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, வீட்டில் இருந்தபோது, பைக் சத்தம் மற்றும் மர்ம பொருள் வீசிய சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தபோது, என் வளர்ப்பு நாய், அந்த மர்ம பொருளை கவ்வியபோது, சத்தத்துடன் வெடித்தது. இதில், வாய்ப்பகுதி சிதறி நாய் உயிரிழந்தது. என்னையும், என் குடும்பத்தையும் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் எண்ணத்தில் செய்திருக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார். இது குறித்து, அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வனப்பகுதி என்பதால், காட்டு பன்றியை வேட்டையாட மர்ம நபர்கள் யாராவது வெடியை வைத்தார்களா என்பது குறித்து, அரூர் வனத்துறையினரும், விசாரிக்கின்றனர்.