விழுப்புரம்:இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாஜி ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் மனைவி சுதா,34; இவர், கடந்த 2014ம் ஆண்டு, இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டினார்.இதற்கான தொகை 59 ஆயிரத்து 541 ரூபாயிற்கான காசோலை வழங்க, அப்போதைய தேவதானம்பேட்டை ஊராட்சி தலைவர் ஆறுமுகம்,45; ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து சுதா, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார், சுதாவிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் ஆறுமுகத்தை, கையும் களவுமாக கைது செய்தனர்.அவர் மீது, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், சுதாவிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால், மேலும், 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நேற்று தீர்ப்பளித்தார்.சிறை தண்டனை பெற்ற ஆறுமுகம், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.