ஊட்டி: தேதி குறிப்பிடாத நகை கடன் தள்ளுபடி அறிவிப்பால், நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில், இரண்டு நாட்களில், 30 கோடி ரூபாய் வரை, மக்கள் நகைகளை அடமானம் வைத்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பெற்ற பயிர் கடன், 225 கோடி ரூபாய் அரசு தள்ளுபடி செய்தது. இதனால், 33 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.கடந்த வாரம், முதல்வர் பழனிசாமி, 'கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகள், 6 சவரன் வரை வைத்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, அறிவித்தார். ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்திய நிலையில், ஏராளமான பொதுமக்கள் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து வருகின்றனர்.நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட, 22 கிளைகளில், கடந்த இரண்டு நாட்களாக மக்கள் நகைகளை எடுத்து சென்று டோக்கன் பெற்று வரிசையில் நின்று, அடமானம் வைத்து வருகின்றனர். 30 கோடி ரூபாய் வரை அடமானம் வைக்கப்பட்டுள்ளது.நேற்று, பெரும்பாலான வங்கிகளில் நகைகளை அடமான வைக்க வந்தவர்களிடம் வங்கி நிர்வாகம், 'நகை அடமானம் எடுக்க பணம் இல்லை' என, திருப்பினர்.கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், 'எந்த தேதியில் இருந்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வராததால், மக்கள் தற்போதும் அடமானம் வைக்க வருகின்றனர். தேர்தல் முடிந்த பின் தான், முழு விபரம் தெரிய வரும்' என்றனர்.