மதுரை:'ஜீப் இருக்கு... டிரைவர் இல்லை; ஆள் இருக்கு... வேலை நடக்க மாட்டேங்குது; என்னை இடம் மாற்றுங்கன்னு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. 'நீங்களாவது என்னை வேறிடத்திற்கு மாற்றுங்க' என, தேர்தல் கமிஷனுக்கு, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் மனு அனுப்பி உள்ளார்.
டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில் இயங்கும், பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன. ஏலச்சீட்டு, நிதி நிறுவன மோசடிகளை இப்பிரிவு விசாரிக்கிறது.அரசு அலுவலகம் போன்று சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வரவேண்டியதில்லை என்பதால், பெண் போலீசார் இப்பிரிவில் பணியாற்ற, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை பிரிவில், பெரும்பாலும் பெண் போலீசார்தான் உள்ளனர். குற்றவாளிகளை தேடி பிடிப்பது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்படுவதால், நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குகின்றன. வழக்கு விபரங்களை, 'டைப்' செய்வதற்குகூட ஆட்கள் இல்லாததால், நீதிமன்ற கண்டிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. தவிர அவமதிப்பு வழக்குகளும் அதிகரிக்கின்றன.அலுவல் பணிக்காக, டி.எஸ்.பி.,க்கு அரசு ஜீப் இருந்தும், 10 மாதங்களாக டிரைவர் ஒதுக்கப் படவில்லை.
மாவட்ட எஸ்.பி.,க்களிடம் கேட்டதற்கு, 'நீங்கள் எந்த பாதுகாப்பு பணிக்கும் வருவதில்லை. பிறகு ஏன் நாங்கள் டிரைவர் தர வேண்டும்' என, பதில் வந்ததால், டி.எஸ்.பி., பைக்கில் சென்று வருகிறார்.விரக்தியடைந்த டி.எஸ்.பி.,தன்னை வேறு மாவட்டத்திற்காவது மாற்றுங்கள்' என, மூன்று முறை நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.,யிடம் மனு கொடுத்து பார்த்தார். கண்டுகொள்ள வில்லை. ஆறு முறை, தன் துறை ஐ.ஜி.,க்கு கடிதம் அனுப்பியும், கண்டுகொள்ளவே இல்லை.
தேர்தல் அறிவிப்பதற்கு முன், தமிழக அளவில் டி.எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டனர். அப்போதாவது தன்னை இடமாற்றுவர் என காத்திருந்து ஏமாந்தார். தற்போது, தேர்தல் கமிஷன்தான் இடமாறுதல் செய்ய முடியும் என்பதால், தன் நிலையை சொல்லி, புலம்பி மனு அனுப்பி உள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:கடந்த, 2018 அக்., 15 முதல் இப்பிரிவில் பணியாற்றுகிறேன். இங்கு பணிபுரிவதற்கான உகந்த சூழல் இல்லை. 10 மாதங்களாக டிரைவரும் இல்லை. சக போலீசாரின் ஒத்துழைப்பு இல்லை. குடும்ப சூழல் கருதி இப்பிரிவில் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. அடுத்தடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சந்திக்க வேண்டியுள்ளதால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, என்னை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றி விடுங்கள்.
பணியிடம் ஒதுக்க முடியாத பட்சத்தில், சென்னையில் காத்திருப்போர் பட்டியலில்கூட இருக்க தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, கூறியுள்ளார்.
டி.எஸ்.பி.,யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:மனு அனுப்பியது உண்மைதான். மன உளைச்சலில் உடல்நலம் பாதிக்காமல் இருக்கவே, இந்த முடிவை எடுத்தேன். சில மாதங்கள் அனுமதி பெற்று, விடுமுறையில் சென்றேன். அம்மாதங்களுக்குரிய சம்பளம் இன்னும் தர வில்லை.இதனால், என் குடும்ப சூழல் பாதித்துள்ளது. ஏற்கனவே ஒரு டி.எஸ்.பி., இதுபோன்று மன உளைச்சலில் இறந்தார். என்னைப் போலவே சிலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.