கோவை:தேர்தல் விதிமீறலை தடுப்பதற்காக, ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றி, கோவை, பாலக்காடு, திருச்சூர் கலெக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழகம், கேரளாவில், ஏப்., 6ல் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும், எல்லையோர மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, விவாதிக்கும் கூட்டம், கேரளா, பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டில் நடந்தது.
கூட்டத்தில், கோவை மாவட்டத்தில், எல்லையோரம் உள்ள ஒன்பது சோதனைச்சாவடிகளில், ஆய்வை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.தேர்தல் பரிசுப் பொருட்கள் பரிமாற்றம், பணம், மது பாட்டில் எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து, அலுவலர்கள் விவாதித்தனர்.
அதிக எண்ணிக்கையிலான பொருட்களை வாங்குவோர் விபரங்களை பகிர்தல், சந்தேகத்துக்கு இடமான வகையில், எல்லை கடந்து செல்லும் வாகனங்கள் தொடர்பான தகவலை, உடனுக்குடன் பரிமாறுதல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.பிரதான சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி, எல்லை கடந்து செல்லும் அனைத்து வழிகளையும் கண்காணிப்பது பற்றி ஆலோசித்தனர். கூட்டத்தில், மூன்று மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் வன அலுவலர்கள் பங்கேற்றனர்.