மதுரை:மதுரை, தேனியில் வருமான வரித்துறையை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, ஒரே நேரத்தில், அரசு ஒப்பந்ததாரரின் தியேட்டர்கள், கட்டுமான நிறுவனம், அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் பாதுகாப்புடன், இந்த சோதனை நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு துவங்கிய இச்சோதனை, மாலை வரை நீடித்தது. இதில் ஏராளமான பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.சட்டசபை தேர்தலுக்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், இச்சோதனை நடந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வேறு எந்த தகவலையும் தெரிவிக்க, அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த, மற்றொரு அரசு ஒப்பந்ததாரர் வருமானவரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, மதுரை வருமானவரித் துறை அதிகாரிகள், எட்டு பேர், ராமநாதபுரத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில், நேற்று மதியம் முதல் இரவு வரை சோதனை நடத்தினர்.