அடையாறு : சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக, அடையாறு காவல் மாவட்டத்தில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அடையாறு காவல் மாவட்ட எல்லையில், 13 காவல் நிலையங்கள் உள்ளன. சட்டசபை தொகுதியை பொறுத்தவரை, வேளச்சேரி தொகுதி, இந்த காவல் மாவட்டத்தில் முழுமையாக வரும்.குறிப்பிட்ட பகுதி எல்லையில், சோழிங்கநல்லுார் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் வரும். இதில், சோழிங்கநல்லுார் தொகுதி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.இந்த சூழலில், தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம், அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இதில், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில், எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளன.
அதில், பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை; அங்கு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.கடந்த தேர்தல்களில், தொடர்ந்து பிரச்னை செய்த நபர்கள் குறித்தும்; ரவுடிகள்; பிரச்னை ஏற்படுத்தும் வகையில், துாண்டிவிடும் கட்சி நிர்வாகிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, காவல் துணை ஆணையர் விக்ரமன், போலீசாருக்கு சில அறிவுரைகள் வழங்கி உள்ளார்.கொரோனா பாதிப்பு இருப்பதால், சமூக இடைவெளி கடைப்பிடித்து தேர்தல் பணி செய்ய வேண்டும்;
பொதுமக்களுக்கு, தொந்தரவு ஏற்படாத வகையில் தேர்தல் பணி இருக்க வேண்டும். பொதுமக்கள், ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதால், அதற்கு ஏற்ப போலீசாரின் அணுகுமுறை இருக்க வேண்டும் என, விக்ரமன் கேட்டுக்கொண்டார்.