தாம்பரம் ரயில்வே பணிமனையில், பராமரிப்பு பணி நடப்பதால், 32 எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:புதுச்சேரி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், 20 மற்றும் 21ம் தேதி, இருவழியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல், காரைக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வரும் சில ரயில்கள், 14 முதல் 21ம் தேதி வரை, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், செங்கல்பட்டிலிருந்து புறப்படும்.
ஆந்திரா, கேரளா, ஒடிசாவிலிருந்து சென்னை வரும் ரயில்கள், மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து, கேரளா மாநிலம் குருவாயூருக்கு வரும், 21ம் தேதி இயக்க வேண்டிய சிறப்பு ரயில், நிலையம் மாற்றப்பட்டு, விழுப்புரம் நிலையத்தில் இருந்து, குருவாயூருக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதே போல், சென்னை - திருப்பதி ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.