ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் | சென்னை செய்திகள் | Dinamalar
ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 மார்
2021
03:27

ஆலந்துார் : கமலை வரவேற்க, அவரது கட்சியினர், ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையம் முன், வாகனங்களை நிறுத்தியதால், கத்திப்பாரா, ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், நேற்று, ஆலந்துார், வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். ஆலந்துார் தொகுதியில், மதனந்தபுரத்தில் இருந்து பிரசாரம் துவக்க, வேனில் வருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் இருந்து புறப்பட்ட கமல், திடீரென, மெட்ரோ ரயில் மூலம் ஆலந்துாருக்கு பயணித்தார். இதையறிந்து, அவரின் கட்சியினர், ரயில் நிலையம் முன், குவிந்தனர். அவர்கள் வந்த வாகனங்களும், அங்கே வரிசை கட்டி நிறுத்தப்பட்டன.கமலுக்கு காவலாக வந்த போலீசாரின் வாகனங்களும், ரயில் நிலையம் முன், சாலையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், நேற்று மாலை, 4:00 மணி முதல், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து பாதிப்பு துவங்கியது.



மாலை, 4:30 மணிக்கு, ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த கமல், பிரசார வாகனத்தில் ஏறி, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. ஜி.எஸ்.டி., சாலையில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்திப்பாரா முழுதும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.மாநில நெடுஞ்சாலையில் ஈக்காட்டுத்தாங்கல் வரையிலும், அண்ணா சாலையில் கிண்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒன்றரை மணி நேரத்திற்கு பின், வாகன போக்குவரத்து, சகஜ நிலைக்கு திரும்பியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X