'Ease of Living 2020' என்ற பெயரில் வாழ எளிதான நகரங்கள் குறித்த சர்வே மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளாக சர்வே நடந்தது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு தனிப்போட்டி. இதில் நாடு முழுவதும் 49 நகரங்கள் இடம்பிடித்தன. தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் இருந்தன. இந்நகரங்களின் கல்வி, சுகாதாரம், குடியிருப்பு வசதி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தங்கள் நகர் குறித்து மக்கள் அளித்த கருத்துகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.தற்போது சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதில் பின்னடைவை சந்தித்த மதுரை நகர் வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் 22வது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதல் மூன்று இடங்கள் முறையே பெங்களூரு, புனே, ஆமதாபாத் நகரங்களுக்கு கிடைத்தன. சென்னை 4வது இடத்திற்கும், கோவை 7 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன. கடைசியாக 2018 ம் ஆண்டு நடந்த சர்வேயில் இவ்விரு நகரங்களுக்கும் டாப்-10 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இப்போது போன்றே அப்போதும் மதுரை 28 வது இடத்தில் தேங்கி இருந்தது. வெறும் 6 இடங்களே முன்னேறி இருக்கிறது.நகரில் நீடிக்கும் சுகாதார பிரச்னை, பாதுகாப்பின்மை, பொருளாதார நெருக்கடிகள் போன்றவை பெரும் சவாலாக இருக்கின்றன. இக்குறைகள் எல்லாம் நீங்கி மதுரையும் வாழ எளிதான, தகுதியான நகராக மாற வேண்டும். இதற்கு நல்ல திட்டங்கள் மூலம் அரசும், சரியான நடவடிக்கைகள் மூலம் மக்களும் மனது வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.