சென்னையில், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, 15 நாட்களில் மட்டும், 209 குடும்பங்களில், கொரோனா தொற்றால், 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், 2020ல், மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு அடுத்து, கொரோனா பாதிப்பு மிகுந்த பகுதியாக, தமிழகத்தில், சென்னை உருவெடுத்தது. எச்சரிக்கைசுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் வாயிலாக, தமிழகத்திலும், தலைநகரான சென்னையிலும், தொற்று குறைந்து, கட்டுக்குள் உள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் தொடர் அலட்சியம் காரணமாக, கொரோனா தொற்றின் 'ஹாட்ஸ் பாட்டாக' மீண்டும் சென்னை மாறும் என, சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. ஆனாலும், பேருந்து, ரயில், மெட்ரோ போன்ற அனைத்து பொது போக்குவரத்திலும், பொது நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற அனைத்திலும், சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், 90 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை. இதுபோன்ற பொதுமக்களின் தொடர் அலட்சியம் காரணமாக, சென்னையில், ஒரே குடும்பத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தடுப்பூசி மருந்துகள் குளிர்பதன சேமிப்பு கிடங்கை, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:தமிழகம் வந்த மத்திய குழுவினர், கிண்டி கிங் மருத்துவமனை துவங்கி, வேப்பேரி, சோழவரம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
எடுத்துக்காட்டு
தமிழகத்தில், இதுவரை, 27 லட்சத்து, 84 ஆயிரத்து, 330 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 25.07 லட்சம் கோவிஷீல்டு, 2.77 லட்சம் கோவாக்சின் மருந்துகள் அடக்கம். முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தில், அனைத்து தரப்பினருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.
தமிழகத்தில், 500க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், ஒரே குடும்பத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. சென்னையில், 15 நாட்களில் மட்டும், 209 குடும்பங்களில், 450 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக குடும்ப நிகழ்ச்சிகளால், தொற்று பரவி உள்ளது.
இதேபோல், கோவையில் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில், குடும்பங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது.தற்போது, பொதுமக்கள் யாரும் முக கவசம் அணிவதில்லை. இதற்காக, அபராதங்களும் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்ட, 14 லட்சம் பேரிடமிருந்து, 13 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 98 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கு முன், 2020ல், ஒரே நாளில், 2,000க்கும் மேற்பட்டோருக்கு கூட, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தயக்கம்அப்போது, ஒரே குடும்பத்தில், ஓரிருவர் தவிர, மற்றவர்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டனர். தற்போது, காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் இருந்தால், வெளியே சொல்லவும், மருத்துவமனைக்கு வரவும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், தனிமைப்படுத்தி கொள்ளாமல், அனைத்து பகுதிகளுக்கும் சென்று, தொற்றை பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையில், ஒரே குடும்பத்தில் அதிகபட்சமாக, ஒன்பது பேர் வரை, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி இல்லாமல், இதேநிலை தொடர்ந்து நீடித்தால், மும்பையை போல், சென்னையிலும், கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையாக மாறும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட இலவச 'ஊபர்' பயண சேவை
.எனவே, தடுப்பூசி போட விரும்பும் நபர்கள், தங்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மையத்திற்கு சென்று வர, ஊபரின் இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ள தனி நபர்களுக்கு, புரோமோ கோடுகள் வாயிலாக, இலவச பயண சேவை வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -