கடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே குளத்தில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் ராம்குமார், 14; 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் சதீஷ் (எ) புஷ்பராஜ்,14; படிக்காமல் கூலி வேலை செய்து வந்தார்.நண்பர்களான ராம்குமார், புஷ்பராஜ் இருவரும் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தீர்த்தகுளத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் நீரில் வளர்ந்திருந்த கொடியில் சிக்கிக் கொண்டு, வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடினர். அதைப் பார்த்து, அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தனர்.புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.