ராமேஸ்வரம், : தனுஷ்கோடி கடலில் 135 ஆமை குஞ்சுகளை விட்ட வனத்துறையினர், தனுஷ்கோடி முதல் துாத்துக்குடி வரை 13 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து சாதித்துள்ளனர்.
ஜன.,11 ல் தனுஷ்கோடியில் ஒரு ஆமை இட்டு சென்ற 135 முட்டைகளை வனத்துறை சேகரித்து, முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு வேலியில் புதைத்தனர். 53 நாள்களுக்கு பின் நேற்று முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியில் வந்ததும், வனத்துறையினர் சேகரித்தனர்.மாவட்ட வனஉயிரின காப்பாளர் மாரிமுத்து, மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் ஆகியோர் தனுஷ்கோடி கடலில் விட்டனர். இனிவரும் நாளில் அடுத்தடுத்து புதைத்துள்ள முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியில் வரும்.
நேற்று ஒரே நாளில் தனுஷ்கோடியில் 9 ஆமைகள் இட்டு சென்ற 925 முட்டைகள் உட்பட வாலிநோக்கம், வேம்பார், மூக்கையூர், துாத்துக்குடி ஆகிய கடலோரத்தில் இதுவரை 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரித்து பாதுகாப்பு வேலியில் புதைக்கப்பட்டு உள்ளது என வனஉயிரின காப்பாளர் மாரிமுத்து தெரிவித்தார்.