'பள்ளியே தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது... அதற்குள் தேர்வுக்கு தயாராக சொல்லி பயமுறுத்துகிறீர்களே...' என்ற மாணவர்களின் 'மைண்ட் வாய்ஸ்' கேட்கிறது!பிளஸ் 2 தேர்வுகள் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் களம் மட்டுமின்றி மாணவர்களின் தேர்வு களமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளன. மாணவர்கள் தேர்வை சிறப்பாக அணுக, உரிய முறையில் தயாராக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய நேரம் இது.உங்கள் சிந்தனைக்காக சில துளிகள்: படிப்பதிலேயே தினமும் கவனம் செலுத்துங்கள். அதற்காக எப்போதும் படித்துக்கொண்டே இருக்கக்கூடாது. சிறு சிறு உடல், மனம் சார்ந்த பயிற்சிகள் அவசியம். கடைசி நேரத்தில் படிப்பது, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். படிக்கும் நேரத்தில், பிறவற்றை நினைக்காதீர்கள். இதனால் கவனம் சிதறும். படிப்பில் முழு மனதுடன் ஈடுபட முடியாது. முன்பு, மாணவர்கள் 'டிவி', மொபைல் பார்க்க வேண்டாம் என்று கல்வியாளர்களால் அறிவுரை வழங்கப்பட்டன. ஆனால், இன்று காலம் மாறி கல்வியே 'டிவி' மற்றும் மொபைல் வாயிலாக வழங்கப்படும் நிலை உருவாகிவிட்டது. ஆகவே, இவற்றை தவிர்க்க வாய்ப்பில்லை. அதேநேரம், அவற்றை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது, 'டிவி', மொபைல், லேப்-டாப் ஆகியவற்றை கல்வி கற்பதற்கும், திறனை மேம்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துங்கள். தேர்வுக்கு தயாராவதிலேயே முழு கவனத்தையும் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேர்வை விட பொழுதுபோக்கு ஒன்றும் முக்கியமானதல்ல. கடந்த 10 மாதங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கிலேயே கழிந்துவிட்டதையும் மறவாதீர்கள். தற்போது தவறு செய்து விட்டு பின் வருந்துவதில் பயனில்லை. மகிழ்ச்சியுடன் தேர்வை அணுக தயாராகுங்கள். அதுதான் நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.மாணவர்கள் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வாழ்த்துக்கள்!