கோவை:அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில்நடந்தது; டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன் முன்னிலை வகித்தார்.அதில், கலெக்டர் ராஜாமணி பேசியதாவது
:திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்களை அரசியல் கூட்டங்களுக்கும், பிற அரசியல் தேவைகளுக்கும் வாடகைக்கு கொடுக்கும்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.திருமண மண்டபங்களில், அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை, நடத்த அனுமதிக்கக் கூடாது.
திருமண நிகழ்ச்சியின்போது, அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி சின்னங்கள், கொடிகளுடன் கூடிய விளம்பர பேனர்கள், கொடிகள் போன்றவற்றை, மண்டபங்களில் வைக்க அனுமதிக்கக் கூடாது.அச்சகத்தார் தாங்கள் அச்சடிக்கும் துண்டுபிரசுரம், விளம்பர போஸ்டர்களின், 10 நகல்களை, அச்சடித்த, 3 நாட்களுக்குள், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு பிரதி மற்றும் எண்ணிக்கை விவரங்களை, பதிவேடாக பராமரித்து வர வேண்டும். வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினருக்கு வழங்கிய ரசீது பிரதியை பராமரிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.நேர்முக உதவியாளர்கள் சிவக்குமார், முத்துராமலிங்கம், சுஜாதா, தாசில்தார் சுந்தரராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.