கோவை:சூலுார் லாரி உரிமையாளர் சங்கத்தின் பெட்ரோல் 'பங்க்'களில், 1.11 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.கோவை சூலுார் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளராக இருப்பவர் விஸ்வநாதன். சங்கத்தின் சார்பில், சூலுாரில், மூன்று பெட்ரோல் 'பங்க்' செயல்பட்டு வருகின்றன.பெட்ரோல் பங்குகளின் மேலாளராக, திருப்பூர் மாவட்டம் பல்லடம், பெரும்பாளி சுக்காம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த், 38 என்பவர் பணிபுரிந்து வந்தார்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருந்து பெட்ரோல் அனுப்பப்பட்டது. இதற்காக, நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும், கணக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. இப்பட்டியலில் திருத்தம் செய்து போலி ஆவணங்களை தயாரித்த ஆனந்த், 1.11 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார். சங்கத்தின் ஆண்டு கணக்கெடுப்பின்போது, மோசடி தெரியவந்தது. இதுகுறித்து விஸ்வநாதன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில், ஆனந்த் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.