சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களில், சுற்றுச்சூழல் காக்க, பசுமை தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இப்பாதையில், 39 நிலையங்கள் உள்ளன.இந்நிலையங்களில், சுற்றுச்சூழல் காக்க, நடைமேடை நிழற்பகுதியில், அதிகளவு பிராணவாயுவை வெளியிடவும், நிலையச்சூழலை அழகாகக்கவும், சியோபைட்ஸ் வகை தாவரங்களுடனான, பசுமை தொட்டிகள் நிறுவப்படுகின்றன.
இத்திட்டத்தில், முதல் கட்டமாக, கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில், மணலால் நிரப்பப்பட்ட தட்டுகளில், பசுமை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. உபரி நீர் இதில் சேகரிப்பட்டு, நடை மேடையில் தண்ணீர் சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ரெபிக்ஸ், எக்சல்சா, பென்டானஸ், ஷெப்பிளரா, வேரிகேட்டட் குட்டை குடை தாவர செடிகள், பசுமை தொட்டிகளில் நடப்பட்டுள்ளன.
இதனால், கரியமில வாயு உறிஞ்சப்பட்டு, நிலையங்களில் உள்ள வெளிக்காற்று சுத்திகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கிறது.கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில், பசுமை தொட்டி திட்ட செயல்பாட்டை, மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதீப்யாதவ் நேற்று ஆய்வு செய்தார். பசுமை தொட்டி திட்டம், அனைத்து மெட்ரோ நிலையங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.