சில வரி செய்திகள் | சென்னை செய்திகள் | Dinamalar
சில வரி செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:31

கடையில் தீ: உரிமையாளர் பலி



சென்னை, நீலாங்கரை, செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த மளிகை கடைக்காரர், முருகேசபாண்டியன், 28. நேற்று முன்தினம் இரவு, கடையின் உள்பக்கம் சட்டரை சாற்றிவிட்டு, உள்ளேயே படுத்திருந்தார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், கடைக்குள் சென்று பார்த்தபோது, முருகேசபாண்டியன் தீயில் கருகி இறந்து கிடந்தார். இது குறித்து, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.



இருவருக்கு 'குண்டாஸ்'



கடலுார் மாவட்டம், பாதிரி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 23. இவர் மீது, சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில், கஞ்சா விற்ற வழக்கு உள்ளது. சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 31. இவர் மீது, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு உள்ளது.இவர்கள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கமிஷனர் உத்தரவின் படி, இருவர் மீதும் நேற்று, குண்டர் சட்டம் பாய்ந்தது.



நகைக்காக மூதாட்டி கொலை



ராயப்பேட்டை, ரோட்டரி நகரைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி,73; திருமணமாகாதவர். நேற்று முன்தினம் காலை ஆதிலட்சுமியைக் காண, உறவினர்கள் வந்த போது, அவர் இறந்து கிடந்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த, வசந்த் குமார், 22, என்பவரை கைது செய்தனர். ஆதிலட்சுமி அணிந்திருந்த நகையை பறிப்பதற்காக, கஞ்சா போதையில், அவரை தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.



போதை மாத்திரை பறிமுதல்



நெதர்லாந்து நாட்டிலிருந்து, நேற்று முன்தினம் மாலை, சென்னை வந்த சரக்கு விமானத்தில், சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அதில், கன்னியாகுமரி முகவரியிலிருந்த பார்சலுக்குள், ரூ.4.75 லட்சம் மதிப்பிலான, 95 'மெத்தாபேட்டமைன்' போதை மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.



கண்காணிப்பாளர் மர்ம சாவு



திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர், சுரேஷ்குமார், 51; சென்னை டி.ஜி.பி., அலுவலக கண்காணிப்பாளர். உடல் நிலை சரியில்லாததால், விடுதியிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாகியும் விடுதியின் அறை திறக்கப்படாததால், அங்கு வந்த போலீசார், அறையின் கதவை உடைத்தனர். அங்கு, மர்மமான முறையில் இறந்து கிடந்த சுரேஷ் குமாரின் உடலை மீட்டனர்; சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.



பஸ் மோதி தொழிலாளி பலி



சென்னை, மண்ணடியைச் சேர்ந்தவர் முகமது மன்சூர், 45; பழைய இரும்பு விற்பனை கடையில் வேலை செய்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு, இரு சக்கர வாகனத்தில், மணலிக்கு சென்றார். கொசப்பூர், 200 அடி சாலை சுங்கச்சாவடியை கடந்த போது, பின்னால் வந்த தனியார் நிறுவன பஸ் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். பேருந்து ஓட்டுனர் துர்காபிரசாத், 33, கைது செய்யப்பட்டார்.



பிரபல ரவுடி கைது



சென்னை, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்த, பிரபல ரவுடி ஜித்தேந்திரன், 29, மீது, கொலை உட்பட, பல வழக்கு நிலுவையில் உள்ளது. ஜாமினில் வந்த இவர், பல வருடங்களாக தலைமறைவாக இருந்தார். ரகசிய தகவல்படி, திருவொற்றியூர் தனிப்படை போலீசார், திண்டிவனம் அருகேயுள்ள கீரனுாரில், கஞ்சா விற்ற ஜித்தேந்திரனை கைது செய்தனர். 30 கஞ்சா பொட்டலங்கள், ஐந்து கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.



மகளிடம் சில்மிஷம்: தந்தை கைது



தாம்பரம் அடுத்த, பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்த மதன்குமார், 50, என்பவருக்கு, 16 மற்றும் 14 வயதில், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மனைவி பெரம்பூரில், துணி வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம், மூத்த மகள் பள்ளிக்கு சென்ற நிலையில், இரண்டாவது மகள் வீட்டில் இருந்த போது, மதுபோதையில் வீட்டிற்கு வந்த மதன்குமார், மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வியாபாரத்திற்கு சென்ற தாய் வீடு திரும்பியதும், தந்தையின் செயல் குறித்து, மகள் தெரியப்படுத்தினார். சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, மதன்குமாரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X