அசோக் நகரில் பிரபல ரவுடி கொலை | சென்னை செய்திகள் | Dinamalar
அசோக் நகரில் பிரபல ரவுடி கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 மார்
2021
04:32

அசோக் நகர் : சென்னை, அசோக் நகரில், பிரபல ரவுடி, மயிலாப்பூர் சிவக்குமார், 10 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.



மர்ம கும்பல்



மயிலாப்பூர், சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார், 44; பிரபல ரவுடி. இவர் மீது, நான்கு கொலை வழக்குகள் உட்பட, 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன.அண்ணா சாலை அடுத்துள்ள டேம்ஸ் சாலையில், நாட்டு வெடிகுண்டு வீசி, ரவுடி தோட்டம் சேகரின் மனைவி மற்றும் அவரது மகனை கொல்ல முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.



இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேற்கு மாம்பலம், நல்லான் குப்பத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் ரியல் எஸ்டேட் அலுவலகம் அமைந்துள்ள அசோக் நகருக்கு சென்றார்.அப்போது, அங்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த, 10 பேர் கும்பல், சிவகுமாரை அரிவாளாள் சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிர் இழந்தார். அவரது முகத்தை கத்தியால் குத்தி, சிதைத்துவிட்டு, அங்கிருந்து மர்ம கும்பல் தப்பியது.



தகவலறிந்து வந்த அசோக் நகர் போலீசார், சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



ரவுடி தோட்டம் சேகரை கொன்றது போல், அவரது மனைவி, மகனையும் கொல்ல, சிவகுமார் முயன்றுள்ளார்.



கண்காணிப்பு கேமரா



இதனால், சேகரின் மகன், தனது ஆதரவாளர்களுடன், ரவுடி சிவகுமாரை கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சிவக்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருவல்லிக்கேணி சேகர் மகன்கள் அழகுராஜா, 22, பாலாஜி, 23, உள்ளிட்ட ஐந்து பேர், கள்ளக்குறிச்சி குற்றவியல் மாஜிஸ்திரேட் அருண்பாண்டியன் முன்னிலையில், நேற்று மாலை சரணடைந்தனர்.



சரணடைந்த ஐந்து பேரையும், கொரோனா பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து திருக்கோவிலுார் சிறைக்கும், போலீசார் அழைத்துச் சென்றனர்.அசோக் நகர் போலீசார், சரணடைந்தவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பின், இந்த கொலையில் பல்வேறு தகவல்கள் தெரியவரும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X