சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள, நீர்நிலைகளில் ஒன்றான ஆலப்பாக்கம் ஏரி, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி, முழுமையாக துார்வாரப்பட உள்ளது. அதன் பிறகே, மற்ற மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், ஆலப்பாக்கம் ஏரி உள்ளது. பல ஆண்டுகால ஆக்கிரமிப்பால், 140 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி, தற்போது வெறும், 5 ஏக்கராக சுருங்கியுள்ளது.ஏரியில், கட்டட கழிவுகளை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி, அவ்வப்போது நடந்து வருகிறது. நம் நாளிதழ், தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதால், 5 ஏக்கர் ஏரி மட்டும் தப்பி பிழைத்தது. இந்த ஏரி பராமரிப்பு, பொதுப்பணித்துறை வசம் உள்ளது.
வேலி அமைப்பு
ஆலப்பாக்கம் பிரதான சாலை -- கிருஷ்ணா நகர், 1வது பிரதான சாலை சந்திக்கும் இடத்தில், ஏரிக்கு, ஒரு கலங்கல் இருந்தது. அந்த கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், கால்வாய் மூலம், கிருஷ்ணா நகர் வழியாக, நெற்குன்றம், மேட்டுக்குப்பத்தில் உள்ள, கடும்பாடி அம்மன் கோவில் முன் உள்ள, குளத்தை நிரப்பும்.
அங்கிருந்து, மற்றொரு கால்வாய் மூலம், நீரானது, விருகம்பாக்கம் ஏரிக்கு செல்லும். தற்போது, இந்த கால்வாய்களும், விருகம்பாக்கம் ஏரியும், கூகுள் வரைபடத்தில் கூட, இல்லாத வகையில், முற்றிலுமாக மாயமாக்கப்பட்டு விட்டன. ஆலப்பாக்கம் ஏரியை சுற்றிலும், ஆரம்ப பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு கூடம், விளையாட்டு திடல் ஆகியவை கட்ட, 2012 மார்ச், 29ல் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், கம்பி வேலி அமைக்கவும், மாநகராட்சி தீர்மானித்தது. அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து, மாநகராட்சி அதிகாரிகள், பெயரளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, வேலி அமைத்தனர். தொடர்ந்து, முறையான பராமிரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் வசமானது.
2015 கன மழையின் போது, ஆலப்பாக்கம் ஏரியில் இருந்து, நீர் வெளியேற முடியாமல், 144, 146, 147, 148 ஆகிய வார்டுகள் மூழ்கின.அதிகாரிகள் முடிவுமழை ஓய்ந்ததும், இந்த பகுதிகள், 10 நாட்களுக்கு மேல் மிதந்தன. அதன் பின்னும், ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவோ, கரையை பலப்படுத்தி, ஏரியை ஆழப்படுத்தவோ, அதிகாரிகள் முன் வரவில்லை.
இது குறித்து, பகுதி மக்கள், மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான பெஞ்சமினிடம், கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசித்தார். மாநகராட்சி சார்பில் ஏரியை துார்வாரி, கரையமைக்க, 10.5 கோடி ரூபாய் மதிப்பில், ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் நடந்தன.
இந்நிலையில், ஏரி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, ஏரியை சீரமைக்க வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம், தானாக முன் வந்து, வழக்கு பதிவு செய்தது.இதனால், மற்ற பணிகள் நிறுத்தப்பட்டு, ஏரியை முழுமையாக துார் வாரிய பிறகு, பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம்பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து, ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து, அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, உரிய மாற்று இடமும், வாழ்வாதாரத்திற்கான வசதிகளையும் செய்து கொடுத்த பிறகு, அவை முறையாக அகற்றப்பட்டு, ஏரி முழுமையாக மீட்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோடையில் தான் பணிகள்
இந்த நீர், சுற்றியுள்ள பகுதி மக்களின், நிலத்தடி நீராதாரமாக விளங்குவதால், கோடையில் ஏரி நீர் வற்றியதும், அடுத்த பருவமழைக்கு முன், துார்வாரும் பணிகள் செய்யப்படும். துார் வாரிய பிறகே, கரை, நடைபாதை, வேலி உள்ளிட்ட, மற்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -