கம்பம் : தினமலர் செய்தி எதிரொலியாக தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்களுக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் டீசல் என்பதை 15 லிட்டராக உயர்த்தி மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலை ஒட்டி ஒரு தொகுதிக்கு 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு, 1 பார்வையாளர் கண்காணிப்பு வீடியோ குழு என மொத்தம் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் காலை 7:00 மணிமுதல் பகல் 2:00 மணி வரை ஒரு ஷிப்டாகவும், பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஒரு ஷிப்டாகவும், இரவு 9:00 மணி முதல்மறுநாள்காலை 7:00 மணி வரை ஒரு ஷிப்டாகவும் பணியாற்ற வேண்டும். இவர்கள் பயன்படுத்தும் வாகனத்திற்கு ஒரு நாளைக்கு தலா 10 லிட்டர் டீசல் அனுமதிக்கப்பட்டிருந்தது. அது மிகவும் குறைவாக இருப்பதாகவும், முழுமையாக கண்காணிப்பு பணிகளை பார்க்க முடியவில்லை என பறக்கும் படையினர் பரிதவித்தனர்.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இக்குழுவினர் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று கண்காணிப்பு செய்வதற்கு வசதியாக ஒரு நாளைக்கு டீசல் அளவை 15 லிட்டராக உயர்த்தி மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருப்தியை தந்துள்ளது.