கடந்த கால வெற்றி, தோல்வியை கணக்கிட்டு, விருத்தாசலம் தொகுதியை கைப்பற்ற காங்.,கும், தி.மு.க.,வும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தொகுதி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.1952ல் விருத்தாசலம் சட்டபை தொகுதி உருவானது முதல், 1962, 1967 மற்றும் 1980, 1984 ஆகிய தேர்தல்களில் காங்., வெற்றி பெற்றுள்ளது. அதன்பின், 2011 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் களமிறங்கிய காங்., மாஜி எம்.எல்.ஏ., தியாகராஜன் மகன் நீதிராஜன், தே.மு.தி.க., முத்துக்குமாரிடம் 13 ஆயிரத்து 641 ஓட்டுகள் வித்தியாத்தில் தோல்வியடைந்தார்.அதன்பின், நேரடியாகவோ, தி.மு.க., கூட்டணியிலோ விருத்தாசலத்தில் காங்., களமிறங்கவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், விருத்தாசலத்தில் போட்டியிட காங்., பகீரத முயற்சியில் இறங்கியுள்ளது.காங்., மாநிலத் தலைவர் அழகிரி, சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை நேரில் சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.ஆனால், விருத்தாசலத்தில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், 'தி.மு.க., தொண்டர்கள் வருகை மாநாடு போல எழுச்சியாக உள்ளது' எனக்கூறிய ஸ்டாலின், மேற்கு மாவட்ட செயலாளரான கணேசனை, வெகுவாக பாராட்டிச் சென்றார். இது, தி.மு.க., நேரடியாக களமிறங்க அச்சாரம் என உடன்பிறப்புகள் உறுதியாக நம்புகின்றனர்.தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், விருத்தாசலம் தொகுதி யாருக்கு என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர் -