கோவை:வெவ்வேறு சம்பவங்களில், கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்தவர்களை, போலீசார் கைது செய்தனர்.கோவை, கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்,55; சிவானந்தா காலனியில் உணவு விடுதி நடத்துகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கவாஸ்கர், 28 என்பவர், ரமேஷிடம், 500 ரூபாய் பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த கவாஸ்கர், ரமேஷின் பையில் இருந்து, 350 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார். ரத்தினபுரி போலீசார், கவாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதேபோல், சிங்காநல்லுார், கோத்தாரி நகரை சேர்ந்த முருகன், 31 என்பவர், உறவினரை அழைத்துச் செல்வதற்காக, திருச்சி ரோடு ஜெய்சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த இருவர், முருகனின் கழுத்தில் கத்தியை வைத்து, பணம் தருமாறு மிரட்டினர். அவரது பாக்கெட்டில் இருந்த, 2,000 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பினர்.முருகனின் சத்தம்கேட்டு அவ்வழியாக சென்றவர்கள், இருவரையும் பிடித்து, சிங்காநல்லுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், உப்பிலிபாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,26, தினேஷ்பாபு,27 என தெரிந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.