கிருஷ்ணகிரி:சமத்துவபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, காட்டி நாயனப்பள்ளி பஞ்., சமத்துவபுரத்தில் உள்ள நுழைவாயிலில், ஈ.வெ.ரா., சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு, 'டூ - வீலரில்' வந்த இருவர், அச்சிலை மீது, டயரை வைத்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளனர்.தகவலறிந்து வந்த மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சிலையை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தார். அதற்குள் அங்கு வந்த சமத்துவபுர மக்கள், சிலைக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போலீசார் சார்பில், சிலைக்கு புதிய வண்ணம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப் பட்டது. காலை, 11:00 மணிக்கு வந்த தி.க.,வினர், 'சிலையை அவமதித்து, தீ வைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். 'சிலை எரிப்புக்கு, பா.ஜ.,வினர் தான் காரணம்' எனவும் தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே பிரச்னையை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும், அங்கு வசிப்பவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.