சின்னாளபட்டி:'வன்னியர் ஒதுக்கீடு வாக்குறுதியை முதல்வர் பழனிசாமி நிறைவேற்ற மாட்டார்'என, சின்னாளபட்டியில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஏ.இராமநாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் இல்ல விழாவில் பங்கேற்ற மாநில மகளிர் அணி தலைவியும், சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி பேசியது:
வன்னியர் ஓட்டுக்காக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை முதல்வர் அறிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார். 40 ஆண்டுகளாக சமுதாய மக்களுக்காக எதுவும் செய்யாமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ராமதாஸ் செயல்படுகிறார்.
வீரப்பன் உயிருடன் இருந்தபோது ஒரு விதமாகவும், தற்போது வேறு விதமாகவும் ராமதாஸ் செயல்பாடுகள் உள்ளன.கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும், என, பேசினார்.காடுவெட்டி குருவின் தங்கை செந்தாமரை பேசுகையில்,''வன்னியர் இன காவலாளியாக அடையாளம் காட்டப்பட்டவர் காடுவெட்டி குரு. தி.மு.க., ஆட்சி அமைந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முழுமையான ஒதுக்கீடு கிடைக்கும்'',என்றார்.