5 கிலோ கஞ்சா பறிமுதல்தரமணி: தரமணி, ராஜாஜி நகரில், கஞ்சா விற்பதாக, தரமணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், குறிப்பிட்ட இடத்தை சோதனை செய்தபோது, மூன்று பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக், 20, சலீம்மொய்தீன், 23, முகம்மது ஹபீஸ், 23, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது.5 பேருக்கு 'குண்டாஸ்'வேப்பேரி: புதுச்சேரி, திடீர் நகரைச் சேர்ந்தவர் கவுதமன், 25. சென்னை, ஈஞ்சம்பாக்கம், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. இவர்கள் உட்பட, நான்கு பேர் மீது, நீலாங்கரை காவல் நிலைய எல்லையில், முன் விரோதம் காரணமாக, ஜெரோம்பிரபு என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. பல்லாவரம், நாகல்கேணியைச் சேர்ந்தவர் பாலசந்திரன், 43. இவர் மீது, கணேசன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இவர்கள் ஐந்து பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி, கவுதம் உள்ளிட்டோரை, நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.மூதாட்டியிடம் செயின் பறிப்புதாம்பரம்: மேற்கு தாம்பரம், லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 66. இவர், நேற்று காலை, 6:00 மணியளவில், வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் சென்று, பால் வாங்கினார். வீடு திரும்பிய போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், கஸ்துாரி அணிந்திருந்த, 5 சவரன் செயினை பறித்து தப்பினார். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.காரில் கஞ்சா கடத்தியோர் கைதுராயப்பேட்டை: ராயப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு, லாயிட்ஸ் சாலை - டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த, 'மாருதி ஸ்விப்ட்' காரை மடக்கி, ஓட்டுனர் உட்பட இருவரிடம் விசாரித்தனர். இருவரும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, காரை, போலீசார் சோதனை செய்தனர். இதில், 6 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, விமல்குமார், 37, ஜான், 30, ஆகிய இருவரை கைது செய்து, 6 கிலோ கஞ்சா, காரை, போலீசார் பறிமுதல் செய்தனர்.விபத்தில் வாலிபர் பலிஆலந்துார்: கூடுவாஞ்சேரி, முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன், 31. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சத்தியசீலன், 23. இருவரும், 18ம் தேதி, சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றனர். லட்சுமிநாராயணன் வாகனத்தை ஓட்டினார். கத்திப்பாரா மேம்பாலத்தில், முன்னால் சென்ற மாநகர பஸ் மீது, இவர்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.பொத்தேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்தியசீலன், சிகிச்சை பலனின்றி இறந்தார். மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டில் திருடியவர் சிக்கினார்அபிராமபுரம்: ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்; ஏற்றுமதி தொழில் செய்கிறார். கடந்த மாதம், அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்தும், விசாரித்து வந்தனர். இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 40, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட நகையில், 3 சவரன் அவரது தங்கையிடமிருந்தும், 7 சவரன் அடகு கடையிலிருந்தும், போலீசார் மீட்டனர்.அ.ம.மு.க., செயலருக்கு வெட்டுவியாசர்பாடி: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் யுவராஜ், 45; அ.ம.மு.க., வட்டச்செயலர். இவரது தம்பி கோவர்தன், 42; ஐகோர்ட் வழக்கறிஞர். நேற்று வீட்டில் தனியாக இருந்த யுவராஜை, மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர். தடுக்க சென்ற கோவர்தனுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில், இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.வியாசர்பாடி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கள்ளக்காதல் காரணமாக சம்பவம் நடந்தது தெரியவந்தது. அண்ணன், தம்பி இருவரையும் கொல்ல முயன்ற நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.