சென்னை : ''சென்னையில், தேர்தல் பாதுகாப்பு பணியில், துணை ராணுவம், போலீசார், கர்நாடக மாநில ஊர்க்காவல் படையினர் என, 30 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்,'' என, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
வேப்பேரியில், நேற்று அவர் அளித்த பேட்டி:சென்னை போலீஸ் எல்லையில், 30 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 2,083 இடங்களில், 11 ஆயிரத்து, 872 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள், 1,349. மிக பதற்றமான ஓட்டுச் சாவடிகள், 30. மக்கள் அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்ய, உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீசார், 23 ஆயிரத்து, 500 பேர், ஓய்வு பெற்ற போலீசார், கர்நாடக மாநில ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என, 30 ஆயிரம் பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டுச்சாவடிக்குள் வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்.
சென்னையில் தேவையில்லாமல் தங்கி இருப்போர் உடனே வெளியேறாவிட்டால், நடவடிக்கை பாயும். தேர்தல் தொடர்பாக, 044 - 23452437 என்ற தொலைபேசிக்கும், 9498181239 என்ற மொபைல் எண்ணிற்கும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.