ஓ.பி.எஸ்., மகன் கார் கண்ணாடி உடைப்பு: 10 பேர் மீது போலீசார் வழக்கு | தேனி செய்திகள் | Dinamalar
ஓ.பி.எஸ்., மகன் கார் கண்ணாடி உடைப்பு: 10 பேர் மீது போலீசார் வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
21:38

போடி:அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், 10க்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.



தேனி மாவட்டம், போடி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ., போட்டியிட்டார். இத்தொகுதிக்கு உட்பட்ட, பெருமாள் கவுண்டன்பட்டியில், ஓட்டுச்சாவடிகளை நேற்று முன்தினம், துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் எம்.பி., பார்வையிட, காரில் சென்றார்.



கார் ஊருக்குள் நுழைந்ததும், அடையாளம் தெரியாத சிலர், எம்.பி.,யின் கார், அவரது ஆதரவாளர்கள் வந்த மற்றொரு காரின் மீதும் கற்களை வீசினர். இதில், இரு கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த பெரியபாண்டி, ராஜாங்கம் உட்பட, 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கம்பு, கட்டையால் எம்.பி.,யை தாக்க முயன்றும், கொலை மிரட்டல் விடுத்தும், கற்கள் வீசி தாக்கியதாக, டிரைவர் பாண்டியன் புகார் செய்துள்ளார். இதன்படி, போடி தாலுகா போலீசார், வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.



100 ‍பேர் மீது வழக்கு





கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி, எமக்கல் நத்தம் ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க., முகவர்கள் வெளியேற்றப்பட்டதை அறிந்து, அங்கு சென்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரனை, தி.மு.க.,வினர் சிலர் தாக்கி, அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். இதுதொடர்பாக அவர், பர்கூர் போலீசில் புகார் அளித்தார்.



அதில், பர்கூர் ஒன்றிய, தி.மு.க., செயலர் கோவிந்த ராசன் மற்றும் பலர் தன்னை தாக்கி, கார் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிவித்திருந்தார்.அதன்படி, பர்கூர் இன்ஸ்பெக்டர் முரளி, சட்ட விரோதமாக கூட்டத்தை கூட்டுவது-, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல், காயப் படுத்தும் நோக்கில் தாக்குதல். மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில், கோவிந்தராசன், அவரது தம்பி வெங்கடேசன் உட்பட, 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X