குக்கிராமங்களுக்கு பஸ் இயக்க நீண்ட காலமாக காத்திருப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
குக்கிராமங்களுக்கு பஸ் இயக்க நீண்ட காலமாக காத்திருப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
00:13

உடுமலை : புதிதாக இணைப்பு ரோடுகள் அமைக்கப்பட்ட பஸ் பார்க்காத கிராமங்களுக்கு, பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களுக்கு ரோடு வசதியில்லாமல் இருந்தது. இக்கிராமங்களுக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், கிராம இணைப்பு ரோடுகள் அமைக்கப்பட்டன.மேலும், 'தாய்' திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களின் ரோடு வசதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.இவ்வாறு, இணைப்பு ரோடுகள் அமைக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, விருகல்பட்டி, பழையூர் ஆகிய கிராமங்கள் இதுவரை பஸ் பார்க்காத கிராமங்களாக உள்ளன.



இக்கிராமங்களுக்கு, பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையிலிருந்து, அடிவள்ளி கிராமம் வழியாக கிராம இணைப்பு ரோடு அமைக்கப்பட்டுள்ளது.இந்த ரோடு, நெகமம் - பல்லடம் மாநில நெடுஞ்சாலையுடன் சேர்கிறது. உடுமலையிலிருந்து விருகல்பட்டி கிராமம் வழியாக நெகமத்துக்கு, பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.



ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள், 2 கி.மீ., துாரம் நடந்து சென்று, பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. ரோடு வசதிக்காக பல ஆண்டுகள் காத்திருந்த மக்கள், தற்போது, எப்போது பஸ் வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X