இயந்திரங்கள் கடத்தியதாக புகார் ஓட்டுச்சாவடியில் நடந்தது என்ன? | சென்னை செய்திகள் | Dinamalar
இயந்திரங்கள் கடத்தியதாக புகார் ஓட்டுச்சாவடியில் நடந்தது என்ன?
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
05:13

சென்னை - வேளச்சேரி சட்டசபை தொகுதியில், ஓட்டுப்பதிவு முறைகேடு, இயந்திரங்கள் கடத்தல் எதுவும் நடக்கவில்லை; இயந்திரங்களை கையாண்டதில் மனித பிழை நடந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் கூறினர்.சென்னை, வேளச்சேரி சட்டசபை தொகுதியில், 261 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கொரோனா பாதிப்பால், 459 ஓட்டுச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம், தொகுதியில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. வேளச்சேரி, டான்சி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 93வது ஓட்டுச்சாவடிக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.மாலை, 7:30 மணிக்கு, இந்த ஓட்டுச்சாவடியில் இருந்து, மூன்று ஊழியர்கள் சேர்ந்து, இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் ஆகியவற்றை, இரு இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றனர்.ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 அடி துாரத்தில் செல்லும் போது, அவர்களை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கட்சியினர், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கடத்தியதாக, மறியல் செய்தனர்.வேளச்சேரி போலீசார், இயந்திரங்களை மீட்டு, அதை கொண்டு சென்ற நபர்களை மடக்கி பிடித்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: வேளச்சேரி தொகுதி, 93வது ஓட்டுச்சாவடியில், 546 ஓட்டுகள் உள்ளன. இந்த மையத்திற்கு, மாநகராட்சி அளித்த பட்டியல் படி, தேர்தல் மண்டல அலுவலராக செந்தில்குமார், 40, உதவி மண்டல அலுவலராக வேளாங்கண்ணி, 48, உதவியாளராக துளசிங்கம், 35, ஆகியோரை நியமித்தோம். ஓட்டுச்சாவடியில், காலை, 8:30 மணிக்கு, வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் பழுதானது. அதில், 15 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. மாற்று இயந்திரம் வழங்கினோம். பழுதான இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்து, ஓட்டுப்பதிவு முடிந்த பின், 'சீல்' செய்து, ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் அனுப்ப வேண்டும். பயன்படுத்திய இயந்திரங்களை, அண்ணா பல்கலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து விட்டு, பயன்படுத்தாத மாற்று இயந்திரங்களை, திருவான்மியூர் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இரண்டும், ஒரே வாகனத்தில் செல்ல வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது, பழுதான இயந்திரத்தில் உள்ள ஓட்டுகள் முதலில் எண்ணப்படும். இது தான் நடைமுறை. ஆனால், 93வது ஓட்டுச்சாவடி தேர்தல் மண்டல அலுவலர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். இது, விதி மீறல் தான். ஆனால், முறைகேடு நடத்த வேண்டும் என்ற நோக்கில் எடுத்துச் செல்லப்படவில்லை. அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளனர். பயன்படுத்திய பழுதான வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் எப்படி வழங்கினர்; ஓட்டுச்சாவடி பாதுகாவலருக்கும், கட்சி முகவர்களுக்கும் தெரியாமல் எப்படி வெளியே சென்றது போன்ற கோணத்தில் விசாரிக்கிறோம். ஓட்டுப்பதிவில் முறைகேடு, இயந்திரம் கடத்தல் என, காங்கிரஸ் புகார் அளித்தது. ஓட்டுப்பதிவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. இயந்திரத்தை கையாண்டதில், மனித பிழை ஏற்பட்டது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பாதுகாவலர்கள், கட்சி முகவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மூன்று அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:வேளச்சேரி தொகுதியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முயன்ற சம்பவம் குறித்து, அனைத்து விசாரணைகளும் நடந்து முடிந்துள்ளன. இது குறித்த விசாரணை அறிக்கை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின், 177வது வார்டு உதவி பொறியாளர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி, 182வது வார்டு துப்புரவு ஆய்வாளர் வேளாங்கண்ணி, 181வது வார்டு சாலை பணியாளர் துளசிங்கம் ஆகிய, மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X