தேனாம்பேட்டை-நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மழை நீர் வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சாலையில் மழை நீர் தேங்காதபடி, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மழைநீர் வடிகால் வாரியத்தினர், ஆண்டுதோறும் இரு முறை துார் வாரி வருகின்றனர்.இருப்பினும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட செனடாப் சாலையில், முறையாக வடிகால் துார் வாரப்படவில்லை. இதனால், சில மாதங்களுக்கு முன் பெய்த மழையின்போது, சாலையை தோண்டி, மழைநீரை ஊழியர்கள் வெளியேற்றினர். ஆனால், தோண்டிய பள்ளத்தை மூடவில்லை.இது குறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடினர்.அதேபோல், அண்ணாசாலை - ஜி.பி.சாலை சந்திப்பில் மழை நீர் வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தையும், ஊழியர்கள் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.