ஆக்கிரமிப்புகளால் மறையும் மழைநீர் ஓடைகள் : மீட்டெடுத்தால் உயரும் நிலத்தடி நீர்மட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்புகளால் மறையும் மழைநீர் ஓடைகள் : மீட்டெடுத்தால் உயரும் நிலத்தடி நீர்மட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
23:31

உடுமலை:உடுமலை பகுதியில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வளமாக்கிய, ஆக்கிரமிப்புகளால் மறைந்து வரும் மழை நீர் ஓடைகளை மீட்க, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் சிற்றாறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குளங்களில், தேக்கி வைத்து, பாசனத்துக்கு பயன்படுத்தும் நடைமுறை, பழங்காலத்திலேயே இருந்தது. புதிதாக பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரும், மழைக்காலங்களில், குளங்களில் இருந்தும், விளைநிலங்களில் இருந்தும் வெளியேறும், உபரி நீர், கலங்கல், ஓடை, பள்ளம் ஆகிய நீர் வழித்தடங்கள் வாயிலாக, பிற பகுதிகளுக்குச் சென்றன.இதில், நீர் வரத்து அதிகமுள்ள பள்ளங்களின் குறுக்கே சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டு, தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் நிலையாக இருந்ததுடன், நீராதாரங்களும் பாதுகாக்கப்பட்டு வந்தன.மீட்பது அவசியம்உடுமலை நகர எல்லையில், தங்கம்மாள் ஓடை, ராஜவாய்க்கால் பள்ளம் உட்பட பல்வேறு நீர் வழித்தடங்கள், பல்வேறு கிராமங்களை தொட்டு, உப்பாறு ஓடையுடன் கலந்து வந்தது.தற்போது, இந்த ராஜவாய்க்கால் பள்ளத்தின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. குறிப்பாக, இப்பள்ளத்துடன் இணையும், மழை நீர் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகலாக மாறியுள்ளது. பல்வேறு கிராமங்களிலிருந்து வரும் ஓடைகள் சீமை கருவேல மரக்காடுகளாகவும், துார்வாரப்படாமல், மண்மேடாகவும் மாறியுள்ளன.நகர எல்லையில், இந்த பள்ளத்தின் பெயர் குப்பைக்கிடங்கு என மாறும் அளவுக்கு, இறைச்சி, கட்டடக்கழிவுகள் கொட்டப்பட்டு, பரிதாப நிலையில் உள்ளது.மேலும், இதனுடன் இணையும் தங்கம்மாள் ஓடை வழியாக, நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரும் இணைந்து, மழைக்காலத்திலும், நிறம் மாறியே தண்ணீர் ஓடுகிறது.ராஜவாய்க்கால் பள்ளம், 25 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவு பல்வேறு பெயர்களுடன் பயணித்து, உப்பாறுடன், இணைகிறது. ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போனதால், மழைக்காலத்திலும் இந்த பள்ளத்தில், நீரோட்டம் குறைந்து, உப்பாறு ஓடையை இந்த தண்ணீர் எட்டுவதில்லை. உடுமலை நகரை சுற்றிலும் அமைந்துள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களை வளமாக்கிய நீர் வழித்தடத்தை சீரழித்ததால், நிலத்தடி நீர் மட்டம் நிலையாக இருப்பதில்லை.பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து, நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X