மீன்பிடி தடை காலத்தை மாற்றியமைக்க கோரிக்கை | சென்னை செய்திகள் | Dinamalar
மீன்பிடி தடை காலத்தை மாற்றியமைக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
01:23

காசிமேடு : -''மீனவர்களுக்கும், மத்திய, மாநில அரசுக்கும் எந்தவித பயனும் தராத மீன்பிடித் தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்,'' என, மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



இதுகுறித்து, அகில இந்திய மீனவர் சங்க தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் ரவி கூறியதாவது:தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம், 1983 விதிப்படி, ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஜூன் 14 வரை மீன்பிடித் தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது.கடந்தாண்டு கொரோ னா நோய் தொற்று மற்றும் மீன்பிடித் தடை காலம் என, 135 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதை கருத்தில் கொண்டு, இந்தாண்டு மீன்பிடி தடைகாலம், வழக்கம் போல், 61 நாட்களாக இல்லாமல், 45 நாள்களாக அறிவிக்க வேண்டும்.



இந்த மீன்பிடி தடைக்காலத்தை, ஏப்ரல் - ஜூன் மாதத்திற்கு பதிலாக, அக்டோபர் - டிசம்பர் மாதத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களில், மீன் முட்டைகளோ, மீன் குஞ்சுகளோ இருப்பதில்லை.அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், கிழக்கு கடற்கரை மாநிலங்களில் நல்ல மழை பொழிவு இருக்கும். அப்போது தான், ஆழ்கடலில் உள்ள மீன்வகைகள், கரைக்கு வந்து இனவிருத்தி செய்யும். அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் தான், மீன்களில் மீன் முட்டைகளும், மீன் குஞ்சுகளும் காணப்படுகின்றன. இந்த காலங்களில் தான், மீனவர்களும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.



இதனால், ஆண்டுதோறும் மீன்வளம் குறைந்து வருகிறது.இதை கருத்தில் கொண்டு, கடல் மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுக்கும் எந்தவித பயனும் தராத, ஏப்ரல் முதல் ஜூன் மாத தடையை, இந்தாண்டு நிறுத்தி வைக்க வேண்டும்.ஓமேகா 3, ஓமேகா 6, ஓமேகா 12 உள்ள மீன் வகைகளை பிடித்து வந்து, அரசுக்கு அன்னிய செலவாணி ஈட்டி தரும் விசைபடகு உரிமையாளர்களுக்கு, ஆண்டுக்கு படகு பராமரிப்புக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X