வெளுத்து வாங்கப்போகுது கோடைமழை!உழவு மேற்கொண்டால் நன்மை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வெளுத்து வாங்கப்போகுது கோடைமழை!உழவு மேற்கொண்டால் நன்மை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
23:49

ஆனைமலை : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயிகள், கோடை உழவு மேற்கொண்டு மழை நீரை பயன்படுத்த, வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.



கோவை மாவட்டம் முழுவதிலும், கடந்த ஒரு வாரமாக, பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தினமும் மழை பெய்கிறது.இந்நிலையில், கோடை உழவு மேற்கொண்டு விவசாயிகள், மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிக்கை:



குமரி கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால், கோவை மாவட்டம் முழுவதிலும் வரும், 18ம் தேதி வரையில், பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 15ம் தேதி (இன்று) அதிகபட்சமாக, 37 மி.மீ., மழை பெய்யும். வடக்கு ஒன்றியத்தில், 26 மி.மீ., ஆனைமலை ஒன்றியத்தில், 20 மி.மீ., கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 36 மி.மீ., வரையில் மழை பெய்யும்.தற்போது, பெய்யும் கோடை மழை விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். விவசாயிகள் மழையை பயன்படுத்த, கோடை உழவு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.



கோடை வெயிலினால் இறுகிய மண், உழவு மேற்கொள்வதால் இலகுவாகும். மண்ணில் எளிதாக மழைநீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீர் மட்டம் உயரும். மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, மண் அரிப்பு தவிர்க்கப்படும்.உழவு மேற்கொள்ளாவிட்டால், மேற்பரப்பிலுள்ள மண் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு, மண் அரிப்பு ஏற்படும். உழவு மேற்கொண்டால் மட்டுமே மண்ணிலுள்ள களைச்செடிகள் அழியும், அதனுடன் சேர்ந்து பூச்சிக்களும் அழியும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறையாவது, சட்டி கலப்பையால் உழவு மேற்கொள்ள வேண்டும்.



மழையை பயன்படுத்தி மானாவாரி பயிரான நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடியை துவங்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X