அடங்க மாட்றாங்கய்யா! ரூ.50 ஆயிரம் லஞ்சம் இன்ஸ்பெக்டர் கைது | பெரம்பலூர் செய்திகள் | Dinamalar
அடங்க மாட்றாங்கய்யா! ரூ.50 ஆயிரம் லஞ்சம் இன்ஸ்பெக்டர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:29

பெரம்பலுார்:பெரம்பலுாரில், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, டி.எஸ்.பி.,யிடமும் விசாரணை நடக்கிறது.


பெரம்பலுார் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், 48.இவர், அருகே உள்ள கோனேரிபாளையம் பகுதியில் கல்குவாரி நடத்தி வரும், செந்தில்குமார் என்பவரிடம், குவாரியில் இருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது வழக்கு பதியாமல் இருக்க, லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.



இதையடுத்து, கல் குவாரி பணியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவர், நேற்று காலை, 10:45 மணியளவில், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம், 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார்.அப்போது, மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், இன்ஸ்பெக்டர் பால்ராஜை கையும், களவுமாக கைது செய்தனர். 50 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை பெரம்பலுார் டி.எஸ்.பி., சரவணனுக்காக, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வாங்கியதாக கூறப்படுகிறது.



இதையடுத்து, டி.எஸ்.பி., சரவணன் மற்றும் இதர போலீசாரிடமும், டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான ஆறு பேர் குழுவினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.'வாங்கி' பழகியவர்இன்ஸ்பெக்டர் பால்ராஜ், திருச்சி மாநகரில் பணிபுரிந்தபோது, சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்தவர்களிடம், மாதா மாதம் லஞ்சம் வாங்கியுள்ளார். லாட்டரி விற்பனையாளர் மனோகரனின் மாமூல் டைரியில், பால்ராஜ் பெயரும் இருந்தது.



இதையடுத்து, அவர், தென் மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். அதேபோல், தஞ்சாவூரில் வேலை பார்த்தபோதும், இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் எழுந்தன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X