மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் விரிவாக்கம்; நிர்வாக வசதிகளுக்காக அதிகாரிகள் நடவடிக்கை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் விரிவாக்கம்; நிர்வாக வசதிகளுக்காக அதிகாரிகள் நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
23:11

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 3 அனைத்து மகளிர் காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலையம், 3 மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களை கொண்டுள்ளது.



கிராமங்களில் ஏற்படும் தகராறு, வாகன விபத்து, கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட அனைத்து வகையான சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்திற்கு சென்று பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.பொதுமக்களிடம் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் போலீசார், சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.



மேலும், ஒரு சில பிரச்னைகள் மற்றும் குற்ற சம்பவங்களின் போது போலீசார் கிராமங்களுக்கு உடனடியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கடைகோடியில் உள்ள கிராமங்களின் அருகிலேயே குறுகிய துாரத்தில் மற்றொரு போலீஸ் ஸ்டேஷன் அமைந்திருக்கிறது. இருப்பினும் வரையறைப்படி நீண்ட துாரத்தில் உள்ள கிராம எல்லைக்கான ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.



சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவத்தின் போது சில நேரங்களில், கிராமத்திற்கு உடனடியாக சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது போலீசாருக்கும் சிரமங்கள் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷன் எல்லையை மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையொட்டி, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள கிராமங்களின் துாரம் குறித்து கணக்கிடப்பட்டு அதற்கேற்ப தற்போது சில கிராமங்களின் காவல் நிலைய எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.



அதன்படி, வரஞ்சரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுபாட்டில் இருந்த பெருமங்கலம், சிறுமங்கலம், நல்லசேவியார்புரம், கீழ்நாரியப்பனுார், புக்கிரவாரி ஆகிய 5 கிராமங்கள் கீழ்குப்பம் ஸ்டேஷனுக்கும், சின்னமாம்பட்டு, விளக்கூர், தியாகை, சிறுவல் ஆகிய 4 கிராமங்கள் மற்றும் பானையங்கால், வி.புதுார் குக்கிராமங்கள் தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் , கொட்டையூர், சிறுநாகலுார், பொறையூர் ஆகிய 3 கிராமங்கள் எலவனாசூர்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் கட்டுபாட்டிற்கும் மாற்றப்பட்டுள்ளது.



அதேபோல், சின்னசேலம் ஸ்டேஷன் கட்டுபாட்டில் இருந்த எலியத்துார், தெங்கியாநத்தம், பாதிராம்பள்ளம், கடத்துார் ஆகிய 4 கிராமங்களும், கரியாலுார் ஸ்டேஷன் கட்டுபாட்டில் இருந்த துரூர், புதுக்குட்டை, மல்லிகைப்பாடி, பொட்டியம், மூலக்காடு உள்ளிட்ட 5 கிராமங்களும், கல்படை, மாயம்பாடி, பரங்கிநத்தம், மட்டப்பாறை உள்ளிட்ட 4 குக்கிராமங்கள் கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளது.தியாகதுருகம் ஸ்டேஷன் கட்டுபாட்டில் இருந்த பழைய சிறுவங்கூர், தொண்டனந்தல் ஆகியவை பகண்டை கூட்ரோடு ஸ்டேஷனுக்கும், பாவந்துார் கிராமம் ரிஷிவந்தியத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 23 கிராமங்கள் மற்றும் 9 குக்கிராமங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X